திருநெல்வேலி புளிக்குழம்பு

IMG_20160813_131810

தேவையான பொருட்கள்

 • பெரிய எலுமிச்சை அளவு புளி
 • 15 சின்ன வெங்காயம்
 • 15 பூண்டு பற்கள்
 • 1 முருங்கைக்காய் அல்லது 4 கத்தரிக்காய்
 • சிறிய துண்டு கருப்பட்டி
 • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • சிறிது கறிவேப்பிலை
 • 5 டேபிள் நல்லெண்ணெய்
 • உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க
 • 9 காய்ந்த மிளகாய்
 • 3 டீஸ்பூன் மிளகு
 • 1 டீஸ்பூன் சீரகம்
 • 2 டீஸ்பூன் துவரம்பருப்பு
 • 1 டேபிள் ஸ்பூன் தனியா
 • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
 • 10 கறிவேப்பிலை
செய்முறை
 1. ஒரு அகலமான பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
 2. வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்துக்கொள்ளவும். கத்தரிக்காயை சுத்தமாக கழுவி விட்டு காம்பை நீக்கி விட்டு நான்கு பக்கங்களிலும் லேசாக கீறிக்கொள்ளவும்.
 3. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, தனியா, கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து சிறிய சட்னி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதோடு 4 சின்ன வெங்காயம் மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 4. புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
 5. அரைத்த விழுதை கரைந்த புளிக்கரைச்சலோடு சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 6. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெந்தயம் போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து லேசாக வதக்கி பின் கீறிய கத்தரிக்காய் அல்லது சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. கத்தரிக்காய் நிறம் மாறியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 8. குழம்பை மூடிப்போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
 9. குழம்பு நன்கு கொதித்ததும் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
 10. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
குறிப்பு
இந்த குழம்பில் கத்தரிக்காய்கறிக்கு பதில் முருங்கைக்காய், சுண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சை சேர்த்து செய்யலாம்.
இதற்கு பருப்பு, கருணைக்கிழங்கு மசியல், செள செள கூட்டு, பூசணிக்காய் கூட்டு மற்றும் முருங்கைக்கீரை பொரியல் அற்புதமான சைட் டிஷ்.
Advertisements

கடலைப்பருப்பு பாயசம்

KadalaiParuppuPayasam

தேவையான பொருட்கள்

 • 100 கிராம் கடலைப்பருப்பு
 • 250 கிராம் பாகு வெல்லம்
 • 1 கப் தேங்காய் துருவல்
 • 9 முந்திரி பருப்பு
 • 4 ஏலக்காய்
 • 1 கப் பசும்பால்
 • 4 டேபிள் ஸ்பூன் நெய்
 • 8 உடைத்த முந்திரி பருப்பு
செய்முறை
 1. கனமான கடாயை 2 நிமிடங்கள் சூடாக்கவும். பின் அதில் கடலைப்பருப்பை லேசாக வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
 2. ஒரு சிறிய குக்கரில் வறுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். பின் மூடிப் போட்டு 3 முதல் 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
 3. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 4. குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்து கொள்ளவும்.
 5. வெண்கலப்பானை அல்லது கனமான கடாயில் துருவிய வெல்லம் மற்றும் 1/2 கப் வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறி விடவும்.
 6. வெல்லம் நன்கு கரைந்த பின் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து சிறிது நெய் விட்டு கொதிக்க விடவும்.
 7. அவை லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
 8. தேங்காய் விழுது கடலைப்பருப்போடு நன்கு கலந்து கெட்டியான பின் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பை அணைத்து விடவும்.
 9. 10 நிமிடங்களுக்கு பின் காய்ச்சி ஆறவைத்த பசும் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். இளம் சூடாக பரிமாறவும்.

Click here to view the recipe with step by step instructions @virundhombal.com Kadalai Paruppu Payasam

 

ஈஸி வெஜிடபிள் பிரியாணி

vegetablebiriyani

தேவையான பொருட்கள்

 • 1 கப் பாஸ்மதி அரிசி
 • 15 பூண்டு பற்கள்
 • சிறிய துண்டு இஞ்சி
 • 1 கேரட்
 • 7 பீன்ஸ்
 • 1 உருளைக்கிழங்கு
 • 7 காலிஃப்ளவர் பூக்கள்
 • 1/4 கப் பச்சை பட்டாணி
 • 1 வெங்காயம்
 • 2 பச்சை மிளகாய்
 • 2 தக்காளி
 • 1/4 கப் கொத்தமல்லி இலை
 • 1/4 கப் புதினா
 • 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர்
 • 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
 • 1 எலுமிச்சை பழம்
 • 1 பிரியாணி இலை
 • 2 சிறிய துண்டு பட்டை
 • 5 கிராம்பு
 • 4 ஏலக்காய்
 • சிறிது கல்பாசி
 • 2 அன்னாசிப்பூ
 • 2 டேபிள் நெய்
 • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • உப்பு தேவையான அளவு
செய்முறை
 1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும்.
 2. காய்கறிகளை விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
 3. ஒரு சிறிய சட்னி ஜாரில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 4. ஒரு அகலமான கனமான கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
 5. பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 6. பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 7. பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
 8. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
 9. தக்காளி வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
 10. அவை நன்கு வதங்கியதும் பிரியாணி மசாலா பொடி சேர்த்து காய்கறிகளோடு நன்கு கலந்து கொள்ளவும். பின் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 11. பின் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 12. காய்கறிகள் சிறிது வேகும் வரை மூடிப் போட்டு வேகவிடவும்.
 13. பின் இந்த கலவையை மெதுவாக பிரஷர் குக்கர்க்கு மாற்றி மூடிப்போட்டு சிறிய தீயில் 10 – 15 நிமிடங்கள் வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின் குக்கரை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நெய் விட்டு மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி மூடிப்போட்டு வைக்கவும். தயிர் வெங்காயம் வைத்து பரிமாறவும்.

Click here to view the recipe with step by step instructions @virundhombal.com EASY VEGETABLE BIRIYANI

பாதாம் அல்வா

Badam Halwa

தேவையான பொருட்கள்

 • 1 கப் பாதாம் பருப்பு
 • 1 கப் சர்க்கரை
 • 1/2 கப் பால்
 • 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ
 • 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
 • 2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
 1. பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 2. ஒரு சிறிய பவுலில் குங்குமப்பூவை இளம் சூடான பாலில் கலந்து கொள்ளவும்.
 3. பாதாம் பருப்பு நன்கு ஊறிய பின் தோலை நீக்கி விட்டு ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து பால் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 4. கனமான அகலமான கடாயில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பாதாம் பருப்பு விழுதை சேர்த்து 1 நிமிடம் கைவிடாமல்‌ கிளறவும்.
 5. பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கிளறவும்.
 6. சர்க்கரை நன்கு கரைந்து வரும் போது பாலில் கலந்து வைத்துள்ள குங்குமப்பூவை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும்.
 7. அல்வா சிறிது கெட்டியாகும் போது ஏலக்காய்த்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
 8. கடாயின் ஓரத்தில் இருந்து அல்வா பிரிய ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு அதன் சூட்டிலேயே வைத்து மேலும் 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி நெய் தடவிய டப்பாவில் மெதுவாக கொட்டவும். ஒரு நெய் தடவிய ஸ்பூன் வைத்து அல்லாவின் மேல் தடவி வைக்கவும். 1 மணி நேரத்திற்கு பின் பரிமாறவும்.

Click here to view the recipe @virundhombal.com with step by step photos BADAM HALWA

திருநெல்வேலி சாம்பார்

IMG_20170128_132755~2

தேவையான பொருட்கள்

 • 1/4 கப் துவரம்பருப்பு
 • 1 டேபிள் ஸ்பூன் புளி
 • 1 முருங்கைக்காய்
 • 1 கத்தரிக்காய்
 • 4 வெண்டைக்காய்
 • 1 தக்காளி
 • 12 சின்ன வெங்காயம்
 • 2 பச்சை மிளகாய்
 • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
 • 2.5 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
 • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
 • சிறிது கறிவேப்பிலை
 • சிறிது கொத்தமல்லி இலை
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • உப்பு தேவையான அளவு
அரைக்க
 • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
 • 3 சின்ன வெங்காயம்
 • 2 பூண்டு பற்கள்
 • 1/2 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
 1. ஒரு பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்றாக கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.
 2. பின் துவரம்பருப்பை ஒரு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
 3. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
 4. தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 5. ஒரு குழம்பு பாத்திரத்தில் புளிக்கரைசலை சேர்க்கவும். பின் அதில் கத்தரிக்காய், முருங்கைக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
 6. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. வதக்கிய பொருட்களை புளிக்கரைச்சலில் சேர்க்கவும். மிதமான தீயில் காய்கறிகளை புளிக்கரைச்சலில் நன்கு வேகவிடவும்.
 8. அவை வேகும் போது, குக்கரை திறந்து நன்கு மசித்து கொள்ளவும். பின் அதோடு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 9. காய்கறிகள் நன்கு வெந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் கலந்து வைத்துள்ள பருப்பு கலவை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 10. சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது பெருங்காயத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
 11. பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
 12. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும். சுவையான திருநெல்வேலி சாம்பார் தயார்.
Click here to view the recipe with step by step pictures and instructions @virundhombal.com

காரக்குழம்பு

Karakuzhambu_a

தேவையான பொருட்கள்

 • 10 சின்ன வெங்காயம்
 • 7 பூண்டு பற்கள்
 • 1 தக்காளி
 • 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
 • 2 காய்ந்த மிளகாய்
 • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
 • சிறிது கறிவேப்பிலை
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
 • 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
 • உப்பு தேவையான அளவு
அரைக்க
 • 1 டேபிள் கடலைப்பருப்பு
 • 1 டேபிள் ஸ்பூன் தனியா
 • 1 டீஸ்பூன் சீரகம்
 • 1 டீஸ்பூன் சோம்பு
 • 1/4 கப் தேங்காய் துருவல்
 • 6 சின்ன வெங்காயம்
 • 1 தக்காளி
 • 6 காய்ந்த மிளகாய்
செய்முறை
 1. புளியை கொதிக்கும் நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். பின் 1.5 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
 2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் தனியா சேர்த்து லேசாக வறுக்கவும். பின் சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
 3. பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி அவை நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். வறுத்த பொருட்கள் அதன் சூட்டிலேயே இருந்து ஆறவிடவும். பின் சிறிய மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 4. வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 5. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
 6. பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
 7. இப்போது மெதுவாக புளிக்கரைசலை சேர்க்கவும்.
 8. புளிக்கரைசலை நன்கு கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 9. பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்.
 10. வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும் மிளகாய் வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும். 3 மணி நேரத்திற்கு பின் சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மாம்பழ தேங்காய் பர்பி

MangoBurfi1

தேவையான பொருட்கள்

 • 2 நன்கு பழுத்த மாம்பழம்
 • 1 தேங்காய்
 • 225 கிராம் சர்க்கரை
 • 1/4 கப் பால் பவுடர்
 • 2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
 1. தேங்காயை நன்கு துருவிக் கொள்ளவும். மாம்பழத்தின் தோலை உரித்து கொள்ளவும். பின் நீளமாக நறுக்கி வைக்கவும்.
 2. ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்).
 3. கனமான நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து கொள்ளவும்.
 4. அடுப்பை அணைத்து விட்டு அரைத்த மாம்பழ விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 5. பின் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
 6. மாம்பழ தேங்காய் விழுது சிறிது கெட்டியான பின் நெய் சேர்த்து மீண்டும் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
 7. தேங்காய் மாம்பழ விழுது நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
 8. கலவையின் ஓரங்களில் சிறிது பிரவுன் ஆகும் போது அடுப்பை அணைத்து விடவும். ஒரு சிறிய ஸ்பூனில் சிறிது கலவையை எடுத்து கைகளால் உருட்டி பார்த்தால் அவை ஒட்டாமல் இருந்தால் பர்பிக்கு சரியான பதம்.
 9. பின் நெய் தடவிய தட்டில் கொட்டி நன்கு அறிய பின் சிறு சிறு பர்பிகளாக நறுக்கவும்.

கும்பகோணம் கடப்பா

Kadappa1
தேவையான பொருட்கள்
 • 1/4 கப் பாசிப்பருப்பு
 • 2 உருளைக்கிழங்கு
 • 1 வெங்காயம்
 • 1 தக்காளி
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • சிறிது பட்டை
 • 3 கிராம்பு
 • 1 எலுமிச்சை
 • சிறிது கொத்தமல்லி இலை
 • சிறிது கறிவேப்பிலை
 • 2 டேபிள்ஸ்பூன்‌ எண்ணெய்
 • உப்பு தேவையான அளவு
அரைக்க
 • 1/2 கப் தேங்காய் துருவல்
 • 2 பச்சை மிளகாய்
 • 4 பல் பூண்டு
 • சிறிய துண்டு இஞ்சி
 • 1 டீஸ்பூன் சோம்பு
 • 1/2 டீஸ்பூன் கசகசா
 • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
செய்முறை
 1. பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 2. அவை ஆறிய‌ பின் தண்ணீரில் கழுவிக்கொண்டு குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
 3. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
 6. குக்கரை திறந்து பருப்பை மசித்து கொள்ளவும். கிழங்கை லேசாக மசித்து கொள்ளவும்.
 7. தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
 8. பின் வேகவைத்த பருப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
 9. கடப்பா கொதிக்க ஆரம்பித்ததும் உருளைக்கிழங்கு சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவும்.
 10. கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

முளைப்பயறு சப்ஜி

IMG_20170106_201838~2

தேவையான பொருட்கள்

 • 1 கப் முளைக்கட்டிய பயறு
 • 2 தக்காளி
 • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
 • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
 • 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு
 • 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 1. ஒரு சிறிய குக்கரில் முளைப்பயறு, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
 2. கடலைமாவை 1/4 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
 3. குக்கரை திறந்து மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 4. சப்ஜி கொதிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் மற்றும் கடலைமாவு கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
 5. சிறிது நேரம் கொதித்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

படிப்படியாக படத்துடன் முளைப்பயறு சப்ஜி காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.

Sprouts Dal with step by step instructions @virundhombal.com

Blog at WordPress.com.

Up ↑